Friday, May 04, 2012

வழக்கு எண் : 18/9


இந்த திரைப்படம் மற்றும் ஒரு காதல் காவியம். காதலுக்கு மகுடம். பணத்தாசை பிடித்த காவல் துறைக்கு ஒரு சவுக்கடி. பணக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

இப்படி எல்லாரும் சொல்றத நானும் சொல்ல விரும்பல. கமர்சியலா ஒரு படம் ஹிட் ஆகனும்னா அதுக்கு அத்யாவசியமா ஆறு பாட்டு, நாலு ஃபயிட்டு,  பன்ச் டயலாக்கு, திரையில ஒரு அயிட்டம் சாங்கு அப்டி இப்டின்னு எல்லாம் இருக்கனும், இல்ல - இதுல சில உறுப்படியாவது இருக்கனும்னு நம்பி இருக்குற தயாரிப்பளர்களுக்கு இந்த படம் தமிழில் வெளிவந்த சிற்சில 'குறைந்த பட்ஜெட் ஹிட்பட'ங்கள் வரிசையில் மற்றுமொரு நம்பிக்கை. காதல், பருத்திவீரன், கல்லூரி என்று இன்றும் மனதில் நிற்கும் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று!

ஒரு வரி கதைக்கு இப்படியும் ஒரு திரை வடிவம் கொடுக்க முடியும் என்று சவால் விடுகிறார் இயக்குனர். சில காட்சிகளின் கேமரா மூவ்ஸ் திரைக்கதைக்கு சரியாக வலிமை சேர்த்திருக்கிறது. மழையில் அழிந்த ஸ்லேட், எரிகின்ற மண்னெண்ணெய் ஸ்ட்வ், ரோட்டில் அனாதையாய் கிடக்கும் காலி கண்ணாடி பாட்டிலலின் பின்னால் நகரும் கதை, சீலிங் ஃபேன் ரிஃப்லெக்ஷனில் காட்டப்படும் அமைச்சர் செயல்கள், சென்ட்ரல் ரயில் நிலைய சுரங்க பாதையின் சிமெண்ட் ஜன்னல் (ஜாலி) வழியே காட்டப்படும் கதாநாயகன் மயக்கத்தில் விழும் காட்சி, புதிதாய் கழுத்தில் தொங்கும் தாலி பளிச்சென்று தெரிய ஜோதி முகத்தில் சிரிப்போடு கண்ணத்தில் விழும் குழி என்று கேமராமேன் உயிரோட்டத்திற்கு ஆக்ஸிஜென் சப்ளை பன்னியிருக்கார். மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டிருக்கும் கதாநாயகன், இப்படித்தான் இருப்பாள் இந்த இடத்தில் வாழும் ஒரு பெண்பிள்ளையைப் பெற்ற கணவனை இழந்த தாய் என்று அழுத்தி சொல்வது, 'ட்ரீம் சாங்' என்ற பெயரில் எதையும் சேர்க்காமல் சொதப்பாமல் விட்டிருப்பது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்திற்கு ப்ளஸ்.

கிட்டதட்ட எல்லாமே புதுமுகங்களாய் காட்சியளிப்பது கதைக்கு மெருகு தான். இதை யோசித்து திட்டமிட்டு இயக்குனர் முடிவெடுத்திருந்தால்தான் அது அவரின் திறமையை பறைசாற்றுவதாய் இருக்கும். நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பொறுப்பை மிகவும் சிறமப்படாமல் நடிப்பில் வெளிக்காட்டியிருப்பது போல் தெரியும் அளவிற்கு இயக்குனர் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது தின்னம்.

துனிச்ச‌லான கதாநாயகியின் முடிவிற்குப்பின் படத்தின் கதை விரட்டி சொல்லப்ட்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. இருந்தாலும் குறை ஒன்றும் இல்லை என்றே சொல்லி முடிக்கவும் தோன்றுகிறது. வழக்கு எண் : 18/9ன் மதிப்பீடு 8/9.

நன்றி.

Thursday, November 04, 2010

'வ குவாட்டர் கட்டிங்'


வரி விலக்கு விதிமுறைகளுக்கு வெடி வைக்க இருந்த இந்த படத்தின் பெயர் இப்போது வெறும் 'வ' என்று மாற்றப்பட்டது ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் இன்னொறு பக்கம் ஒரு உறுத்தலை விட்டு சென்று இருக்கிறது.

'வ' என்பது தமிழ் எண் 1/2 யை குறிக்கிறதாம். அதனால் half-quarter-cutting என்று யாரோ ரூம் போட்டு யோசித்து வைத்த பெயர், வரி விலக்குக்காக 'வ குவாட்டர் கட்டிங்' என்று வளம் வந்த்து எத்தனை பேருக்கு தெரியும்? அதை தெரிந்து கொள்ளும் முன்பே சில சதிகாரர்கள் சர்ச்சையை கிளப்பி, பெயரை வெறும் 'வ' என்று மாற்றவைத்தது வருந்ததக்கது தானே!

விளையாட்டு, சினிமா இயக்கம், கலை என்று பெரிய பெரிய விஷயங்களில் தான் அடுத்தவன் திறமையை வெளியே காட்ட விடாமல் அப்ப்டியே அமுக்கிவிட வல்லவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் தெரியுமே தவிற, கையில் இருக்கும் கதைக்கு பெயர் சூட்டுவதற்கு செலவு செய்த மூளையை கூட, இப்படியா முடங்க வைப்பது?

இந்த ஆதங்கத்திற்காகவாவது இந்த படத்தை பார்த்தே விட வேண்டும் என்றிருக்கிறேன்!

அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

Monday, July 19, 2010

நன்றி...

சொந்த ஊரிலிருந்து
சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்
டூ வீலரில்...

வழியில் லிஃட் கேட்டு ஏறிக்கொண்டாள்
என் தாய் வயதில் ஒரு பெண்மணி.

சில கிலோமீட்டர் கடந்தபின்
நிறுத்தச் சொன்னாள்.
நிறுத்தினேன்.

என் தோள்பிடித்து இறங்கியவள்
திரும்பிக்கூடப் பார்க்காமல் சொன்னாள்
"பத்திரமா போய்ட்டு வா ராஜா" என்று.

நகர மனமில்லாமல் நின்றுவிட்டேன்
அவள் நன்றி சொன்ன விதத்தை கேட்டு!

Thursday, July 01, 2010

ஏசி பஸ்...

சலவை நோட்டுகள் மட்டுமே
பயணசீட்டு வாங்க பயணிக்கின்றன...
சலவை செய்யாத மனங்களின்
கைகளில் மாறி மாறி!

Tuesday, January 22, 2008

உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை?

என் கற்பனைகளுக்கு
உன் உரு கொடுத்தேன்,
அவை கவிதைகளாயின...

உனக்கு ஏனோ புரியவில்லை
அவை தமிழ்த்தாவனி போட்ட உன் உருவம் என்று...

ஊரார் கேட்கின்றனர் -
உரு கொண்ட கவிதைக்கு
உயிர் கொடுப்பது யாரென்று?

உன்னை காட்டிக் கொடுக்க விருப்பமில்லை,
உனக்கென்று இருக்கும் என் உயிரை
விட்டுக்கொடுக்கவும் தெரியவில்லை,
பதில் சொல்ல முடியவில்லை,
உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை?

உயிர்த்தெழுந்தேன் நான்...

கவிதை எழுத நினைத்து
கண் மூடிப் பார்த்தேன்...

நீ வந்து நின்றாய்.

உன் சிரித்த முகத்தைப் பார்த்து
செத்துப்போனது என் கவிதை!

உயிர்த்தெழுந்தேன் நான்...

நிம்மதி ???

தாகம்,பசி,வலி,வேதனை,
ஆசை,ஏக்கம்,சோர்வு,
கனவு,நினைவு
என்று அனைத்திற்கும் விடுமுறை அளிக்கிறேன் -
நான் உன் மடியில் படுத்து உறங்கும் போது...

...

அலாரம் அடித்து
தூக்கம் கலைந்தபின் தான் உண்ர்ந்தேன்,
அந்த நிம்மதி கூட,
கனவில் தான் என்று...

முதல் கவிதை!

நண்பர்களே,

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலில் கவிதை எழுதினேன்...
"கவிதை" என்று தலைப்பு கொண்ட அந்த இரண்டுவரி கவிதை...

"கவிதை"

காதலில் உள்ள கட்டபொம்மனை
காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்!

பஸ் ஸ்டாண்ட் கவிதை...

கூட்டம்,
நெரிசல்,
வியர்வை,
ஜன்னலோர சீட்,
ஓடிப்போய் ஏறியது,
ஓடவிட்டு ஏறியது,
படிகட்டு பயணம்,
பல கைகள் மாறி வாங்கிய டிக்கெட்,
அதன் ஒரு மடிப்பு -
அந்த 'மஞ்சள் சுடிதார்' போட்டவளுடையது,
என்ஜின் இரைச்சல்,
அதை மறந்த ட்ரைவர்,
மேலே வர சொன்னதற்கு கலாய்க்கப்பட்ட கண்டக்டர்,
கூரையில் தாளம்,
கானா பாட்டில் கலைந்து போன பயன கலைப்பு,
இன்னும் எத்தனையோ...

நினைவுக்கு வந்தது
சென்னை மாநகர பேருந்து பயணம்...

நிற்காமல் போனதொரு பேருந்து
நான் இதை எழுதிய தருணம்!

Thursday, August 09, 2007

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!