Wednesday, May 16, 2007

நலம் நலமறிய ஆவல்

கடுதாசி போட்டுபுட்டு
கடத்தெருவுக்கு போறப்பலாம்
தபால்காரன பாத்துபுட்டா
தலையாட்டி கேட்டுக்குவேன்,
என் அம்மாகிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கான்னு...


சைக்கிள் மணி சத்தம் கேட்டா
சட்டுனு எழுந்து ஒடிவருவேன்
தபால் வந்திருக்குமோன்னு
தட்டுத் தடுமாறி ஒடிவந்தா
பொடவக் காரன் வந்திருப்பான்
என் நெனப்புல மண்ணள்ளிப்போட...


காத்திருந்து காத்திருந்து
கடுதாசி கெடைக்கிறப்போ
சேத்துவச்ச சந்தோசமெல்லாம் மூஞ்சில தெரியும்,
அன்னிக்கி மட்டும் தபால்காரன் ஆண்டவனா தெரிவான்!


ஆசப்பட்ட கடுதாசி வந்துடுச்சி
அதுவரைக்கும் இருந்த பசியும் மறந்துபோச்சி
கொண்டாந்த தபால்கார மாமாவுக்கு
கபாலி கட மசால் வட பரிசா போச்சி!


கடுதாசிய கையில வாங்குறப்போ
என் அம்மா கைபுடிச்ச ஞாபகம் வருது
அத நெஞ்சோட அணச்சிகிட்டு நடக்குறப்போ
என்ன கட்டிபுடிச்சி அழுதது கண்ணுல தெரியுது...


அவசரமா ஒரு தடவ
ஆசையா ஒரு தடவ
காலையில ஒரு தடவ
தூங்குறப்போ ஒரு தடவ
திருப்பி திருப்பி படிச்சிட்டு
கண்ண கொஞ்சம் கசக்கிட்டு
பேனா எடுத்து எழுதுறப்போ
பாசம் ஊருது நெஞ்சுக்குள்ள
அத பேனா வரையுது பேப்பருல...


அம்மாவோட ஆஸ்த்துமா,
அப்பாவோட B.P.,
அக்காவோட கல்யாணம்,
தம்பியோட காலேஜி,
லக்ஷ்மி போட்ட கன்னுக்குட்டி,
பைரவன் கடிச்சி வெச்ச பால்காரன் பையன்,
தோட்டத்துல நட்டுவெச்ச ரோஜா செடி,
தண்ணி வராத கார்ப்பரேஷன் கொழா,
'அடடா மறந்துட்டனே'ன்னு
பக்கத்து வீட்டு பாட்டி சொகம்,
ஒன்னொன்னா விசாரிச்சிட்டு
பக்கம் தீந்ததுக்கு அப்புறம்
நெடுக்க திருப்பி எழுதிடுவேன்
எனக்கு ப்ரமோஷன் கெடச்ச விஷயத்த...


பாத்து பாத்து பக்குவமா
எழுத்து அழியாம மடிச்சிபுட்டு
சமச்சி வெச்ச சாதத்துல
ஒரு பருக்க எடுத்து ஒட்டிவெப்பேன்


என்னதான் அவசரமா
ஆபீஸுக்கு கெளம்பினாலும்
அன்னிக்கி மட்டும் மறக்கமாடேன்
அம்மாவுக்கு எழுதின கடுதாசிய...


மாடவீதி வரைக்கும் நடந்து வந்து
போஸ்ட் பாக்ஸ்ல போட்டுபுட்டு
தலையில ரெண்டு சைடுல ரெண்டு
தட்டு தட்டுவேன்...
அக்கறையா தட்டினதுக்கு
துறுபிடிச்ச பெட்டி நைஸா
கையில ஒட்டி அனுப்பிடுவான்
இரும்பு பிசுக்க..
அத தட்டிவிட்டு கெளம்பிடுவேன்
காத்துகெடக்க..!


இன்னிக்கி,
தபால் போட்ற ஆள் இல்ல
தபால் தலையில பசையும் இல்ல
போஸ்ட் ஆபீஸ்ல கியூ இல்ல
போஸ்ட்மேன் தலையில மயிருமில்ல...


எலக்ட்ரானிக்கா பேசிக்கிறோம்
எதுக மோன மறந்துபோச்சு
எழுதிப் பாத்து நாளும் ஆச்சு
அட பேனா பென்சில் மறந்து போச்சு!


இமெயிலு இன்டர்நெட்டு
வாய்ஸ் மெயிலுக்கெல்லாம் வாக்கப்பட்டு
இன்பர்மேஷன் டெக்னாலஜி இனிமையா தெரியுது...
இன்னிக்கொன்னு நாளிக்கொன்னுன்னு புதுமையா போகுது...


உண்ம ஒண்ண சொல்லனும்
உரிமைய கொஞ்சம் எடுத்துக்குறேன்,
தப்பிருந்தா மன்னிச்சிடுங்க
தப்பா ஏதும் சொல்லிப்புட்டா...


இமெயிலு அனுப்பிட்டு
இந்தப்பக்கம் திறும்புறதுக்குள்ள
பதில் வந்து சேந்துறுது - அதுல
'காத்திருக்குற சொகம்'
செதில் செதிலா போயிறுது...


பாசத்த காணல
தமிழ் சுவாசத்த காணல
பேனா புடிச்சி எழுதுறப்போ
கண்ணீர்பட்டு காஞ்சி போன தடயத்த காணல...


வேகமா பேசிக்கிறோம்
வேடிக்க காணல
கீபோர்ட தட்டி தட்டி
கிறுக்கு மட்டுந்தான் புடிக்கல!


புதுசு புதுசுன்னு பூரிச்சிப்போறோம்
பழசோட வாசனைய பதப்படுதாம...
எதுக்கு எதுக்குன்னு தெரியல
அட ஏண்டா இன்னும் புரியல?


நலம் நலமறிய ஆவல்,
இது பழைமையின் அறைகூவல்!